புதன், 31 ஜூலை, 2013

மனதால்கூட தீமை செய்யாதிருப்பது சிறந்தது.



குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். 
அதிகாரம்: இன்னாசெய்யாமை.
குறள்   316 -  320  



இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.        குறள் # 316
துன்பமானவை எனத்தான் உணர்ந்தவற்றை பிறருக்குச்
செய்வதைத் தவிர்க்க வேண்டும்.            பாமரன் பொருள்.

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.            குறள் # 317
எவ்வளவிலும், எப்பொழுதும், எவருக்கும் மனதால்கூட
தீமை செய்யாதிருப்பது சிறந்தது.     பாமரன் பொருள்

தன்னுயிர்க்கு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.      குறள் # 318
தனக்கு துன்பமானவை என்பதை உணர்ந்தவன் என்ன காரணத்தால்
மற்ற உயிர்களுக்கு அத்துன்பத்தைச் செய்வது.     பாமரன் பொருள்

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.         குறள் # 319
பிறருக்கு காலையில் தீமையைச் செய்தால் தமக்கு தீமை
மாலையில் தாமாக வந்துசேரும்.       பாமரன் பொருள்

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

நோயின்மை வேண்டு பவர்.        குறள் # 320
தீமையெல்லாம் தீமைசெய்தவரையே சேரும். (எனவே)பிறர்க்கு தீமைசெய்யார்

துன்பமில்லாது வாழ விரும்புபவர்.     பாமரன் பொருள்

திங்கள், 29 ஜூலை, 2013

தீமை செய்தவரை தண்டிக்கும் வழி அவருக்கு நன்மை செய்துவது.



குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: இன்னாசெய்யாமை.
(குறள் 311 முதல் 315 வரை)


சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.    குறள் # 311
சிறப்பைத்தரும் செல்வத்தை பெறக் கூடுமென்றாலும் மற்றவர்க்கு தீங்கு
செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.   பாமரன் பொருள்

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.       குறள் # 312
கோபம்கொண்டு தீமை செய்தாலும் பதிலுக்கு தீமை
செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.     பாமரன் பொருள்

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.     குறள் # 313
ஏதும்செய்யாதிருக்க தீங்கு செய்தவர்க்கு நாம் தீமைசெய்தபிறகு
தப்பமுடியா துன்பத்தைத் தரும்.         பாமரன் பொருள்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.       குறள் # 314
தீமை செய்தவரை தண்டிக்கும் வழி அவர்வெட்கப்படும் படி
அவருக்கு நன்மை செய்துவிடுவது.       பாமரன் பொருள்.

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.    குறள் # 315
அறிவினால் ஆகும் பயன்ஏதும் உண்டோ, மற்றஉயிரின் துன்பத்தை

தன்துன்பம்போல எண்ணி காக்காவிடில்.      பாமரன் பொருள்.

வியாழன், 25 ஜூலை, 2013

கோபத்தை விட்டவர் துறவிக்கு ஒப்பாவார்.



அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்:வெகுளாமை.        (சினங்கொள்ளாமை)
குறள் 306 முதல் 310 வரை



சினம்என்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.               குறள் # 306.
கோபமென்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு சுற்றமெனும்
பாதுகாப்பு தெப்பத்தையும் சுட்டழிக்கும்.            பாமரன் பொருள்



சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.       குறள் # 307
கோபத்தைக் குணமாகக் கொண்டவன் கெடுவது
நிலத்தை அடித்தவன் கை வேதனைக்கு தப்பாதது போல.          பாமரன் பொருள்

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.    குறள் # 308
தீச்சுவாலையுள்ள நெருப்பில் வாட்டுவதுபோன்ற துன்பத்தைச் செய்தவரிடமும் முடியுமானால் கோபம்கொள்ளாமை நல்லது.          பாமரன் பொருள்


உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.     குறள் # 309
நினைத்தத்தை யெல்லாம் உடனே அடைவான் மனதால்
கோபப்பட நினைக்காதவன் என்றால்.                              பாமரன் பொருள்

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.    குறள் # 310.
பெருங்கோபம் கோண்டவர் இறந்தவருக்குச் சமம்ஆவார். கோபத்தை
விட்டவர் துறவிக்கு ஒப்பாவார்.                                               பாமரன் பொருள்