சனி, 25 மார்ச், 2017

தலைவர் இல்லையென்றால் நிலைத்து நிற்காது

பொருட்பால்
குறள் இயல் படையியல்
அதிகாரம்; படைமாட்சி

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாந் தலை   குறள் எண் 761
நால்வகை படை உறுப்புகள் அமைந்து இடையூறுகளுக்கு அஞ்சாது வெல்லும் படையே ஆள்வோரின்
செல்வத்துள் எல்லாம் சிறந்தது.  பாமரன் பொருள்


உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது    குறள் எண் 762
அழிவு வந்தபோதும் இடையூறுகளுக்கு அஞ்சாத வீரம் வழிவழியாக வரும்
படைக்கு அல்லாது மற்றவருக்கு வராது   பாமரன் பொருள்


ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்  குறள் எண்763
கடல்போல் எலிகள் கூடி ஓசையிட்டாலும் என்ன தீங்கு வரும்
பாம்பு சீறினால் அவை சிதறி ஓடும்.     பாமரன் பொருள்

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை குறள் எண் 764
போரில் அழிவில்லாமல் பகைவர் சதிக்கு பலியாகாமல் வழிவழியாக வரும்
வீரத்தை உடையது சிறந்த படை    பாமரன் பொருள்

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை   குறள் எண் 765
எமனே சினத்துடன் எதிர்த்து வந்தாலும் ஒன்றாகக் கூடி எதிர்த்து நிற்கும்
ஆற்றல் உடையது சிறந்த படை.        பாமரன் பொருள்

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு    குறள் எண் 766
வீரம் மானம் நல்வழிநடத்தல் அரசின் நம்பிக்கைக்கு உரியராதல்
என்ற நான்கும் படைக்கு பாதுகாப்பு       பாமரன் பொருள்

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து குறள் எண் 767
எதிர்த்து வந்த படையின் போரைத் தாங்கி முதலில் வந்த
காலாட்படையை தடுக்கும் தன்மை அறிந்ததே நல்படை.     பாமரன் பொருள்

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்  குறள் 768
போர்புரியும் வீரமும் பகைவரைத்தடுக்கும் ஆற்றலும் இல்லையென்றாலும் படையானது
தன் சிறந்த அணிவகுப்பால் பெருமை பெறும்      பாமரன் பொருள்

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை  குறள் எண் 769
எண்ணிக்கையில் குறைதலும் தலைவரிடம் வெறுப்பும் வறுமையும்
இல்லாதுபோனால் படை வெல்லும்.      பாமரன் பொருள்

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல் குறள் எண் 770   
உறுதிவாய்ந்த வீரர்கள் அதிகமிருந்தாலும் படைக்கு
தலைவர் இல்லையென்றால் நிலைத்து நிற்காது  பாமரன் பொருள்


2 கருத்துகள்:

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

நீண்ட நாட்களாயிற்றே உங்கள் பதிவு பார்த்து. பாமரன் பொருள் நன்றாக இருக்கு.

Unknown சொன்னது…

athira சொன்னது…
நீண்ட நாட்களாயிற்றே உங்கள் பதிவு பார்த்து. பாமரன் பொருள் நன்றாக இருக்கு

நன்றி. உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி, இனி தொடர்ந்து எழுத முயல்கிறேன்.

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.