ஞாயிறு, 23 மார்ச், 2014

இதனை இதனால் இவன் முடிப்பான் என ஆராய்ந்து அவனிடம் தருக.. நிர்வாக இயல் தத்துவத்தை அன்றே சொன்ன வள்ளுவர்


திருக்குறள்

பொருட்பால்

அதிகாரம்; தெரிந்து வினையாடல்

குறள் 511 முதல் 520 வரைநன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்   குறள் # 511
ஒரு செயலின் நன்மையையும், தீமையையும்,ஆராய்ந்து நலம்தரும்
செயலை விரும்புபவனை வேலையில் சேர்க்கவேண்டும்   பாமரன் பொருள்.

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.    குறள் # 512
வரும்வழிகளைப் பெருக்கி வளத்தை உண்டாக்கி வரும் இடையூறுகளை
ஆராய்ந்து நீக்கக்கூடியவனே செயலைச் செய்யவேண்டும்.    பாமரன் பொருள்.

அன்பறிவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.      குறள் # 513
அன்பு அறிவு மனங்கலங்காத உறுதி ஆசையின்மை எனும் நான்கும்
நன்கு அமைந்தவனிடமே வேலையைத் தருக. .         பாமரன் பொருள்.

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.     குறள் # 514
எவ்வகையால் ஆராய்ந்து தேர்ந்தெடுத்தாலும் செயலைச் செய்யும் போது
வேறுபடும் மக்கள் பலர் உண்டு.                  பாமரன் பொருள்.

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்றாற் றன்று.       குறள் # 515
வழிமுறை அறிந்து தடைநீக்கி செய்கின்றவனை அல்லாமல் காரியத்தை
இன்னொருவன் சிறந்தவன் எனக்கருதி ஒப்படைக்கக் கூடாது.  பாமரன் பொருள்

செய்வானை நாடி வினைநாடி காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.        குறள் # 516
செய்பவனின் தன்மையை ஆராய்ந்து செயலை ஆராய்ந்து தகுந்த நேரத்தோடு
பொருந்த எண்ணிச் செய்க.                         பாமரன் பொருள்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.     குறள் # 517
இச்செயலை இந்தவழியால் இவன் முடிப்பான் என ஆராய்ந்து
அச் செயலை அவனிடம் விடுக.                    பாமரன் பொருள்

வினைக்கு உரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரியவன் ஆகச் செயல்.          குறள் # 518
ஒருசெயலுக்கு ஏற்றவனா என ஆராய்ந்த பிறகு அவனை
அச்செயலுக்கு உரியவனாக ஆக்குக.              பாமரன் பொருள்

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு.         குறள் # 519
செயலில் முயற்சியுடையவனின் உறவைத் தவறாக
நினைக்கும் தலைவனைவிட்டு செல்வம் போகும்.    பாமரன் பொருள்

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.  குறள் # 520
நாள்தோறும் தலைவன் உழைப்பவர் நிலைமையை ஆராயவேண்டும்
அவர் மனங்கோணாதிருக்கும் வரை உலகம் கெடாது.       பாமரன் பொருள்


4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான அதிகாரம்... தலைப்பில் சிறப்பான குறள்...

Unknown சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…
//அருமையான அதிகாரம்... தலைப்பில் சிறப்பான குறள்//

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி. ஊக்குவிப்புக்கும் நன்றி

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் கருத்தை (26.03.14) அறிந்தேன்... நேற்று கூட நண்பரின் தளத்தில் வேறொரு பிரச்சனை இதே போல்... 2 நாட்களில் சரியாகி விடும் என்று நினைக்கிறேன்...

avainaayagan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…
//உங்களின் கருத்தை (26.03.14) அறிந்தேன்... 2 நாட்களில் சரியாகி விடும் என்று நினைக்கிறேன்...//
--நன்றி


கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.