சனி, 21 டிசம்பர், 2013

பெரியவர்களை சுற்றத்தாராகக் கொள்வது பேறுகளுள் சிறந்தது


பொருட்பால்
அரசியல்
அதிகாரம்- பெரியாரைத் துணைகோடல்
குறள் 441 முதல் 445 வரை.


அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.       குறள் 441
அறம் உணர்ந்த மூத்த அறிவுடையவரின் நட்பை
பெறும் வகையை ஆராய்ந்தறிந்து பெறுக.   பாமரன் பொருள்.

உற்ற நோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.     குறள்  442
வந்த துன்பத்தைப் போக்கி அது திரும்பவராது முன்காக்கும்
தன்மையுடையவரைப் போற்றி துணையாகப் பெறுக.   பாமரன் பொருள்.

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.    குறள் # 443
அரியபேறுகளுள் எல்லாம் அருமையானது பெரியவர்களைப்
போற்றி சுற்றத்தாராக ஆக்கிக் கொள்வது.    பாமரன் பொருள்.

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை.  குறள் # 444
தம்மைவிட அறிவில்சிறந்தவரை சுற்றத்தாராகும்படி நடத்தல்
வல்லமையுள் எல்லாம் முதன்மையானது..    பாமரன் பொருள்.

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.    குறள் # 445
உடனுள்ள அறிஞர்களைக் கண்ணாகக் கொண்டு நடத்தலால் தலைவன்
அறிஞர்களை துணையாகக் கொள்ள வேண்டும்   பாமரன் பொருள்.செவ்வாய், 12 நவம்பர், 2013

நன்மைதராத செயல் செய்வதை விரும்பாதீர்

பொருட்பால், அரசியல்.
அதிகாரம்; குற்றங்கடிதல்
குறள் 436 முதல் 440 வரை
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.        குறள் # 436
தனதுகுற்றத்தை நீக்கி பிறரது குற்றத்தைக் காணமுற்பட்டால்
என்ன குற்றம் நேரும் தலைவனுக்கு.     பாமரன் குறள்

செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.         குறள் # 437
செய்ய வேண்டியவற்றை செய்யாத கருமியின் செல்வம்
பயன் ஏதுமின்றி வீணாகும்.     பாமரன் பொருள்.

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப்படுவதொன் றன்று.      குறள்  # 438.
கருமித்தனத்தால் கொடுக்காத த்ன்மை எல்லாகுற்றங்களுள்ளும்
ஒன்றாக எண்ணப்படக்கூடியதல்ல. (மிக மோசமானது).   பாமரன் பொருள்.
.
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.     குறள் # 439
எப்பொழுதும் தன்னைத்தான் வியந்துபேசாதீர், விரும்பாதீர்
நன்மைதராத செயல் செய்வதை.    பாமரன் பொருள்.

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.        குறள் # 440
விரும்பியவற்றை பிறர் அறியாமல் நிறைவேற்றினால்

பலிக்காது பகைவரின் சூழ்ச்சிகள்.     பாமரன் பொருள்.

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

குற்றமே அழிவைத் தரும் பகை


பொருட்பால்  அரசியல்  
அதிகாரம் ; குற்றம் கடிதல்
 குறள் 431 முதல் 435 வரை

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.  குறள் # 431
கர்வமும் கோபமும் இழிவான நடத்தையும் இல்லாதவர்களுடைய
மேன்மை மதிக்கத் தக்கது.              பாமரன் பொருள்

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு,     குறள் # 432
பொருள் கொடாமையும் மாட்சியில்லாத மானமும் தீயவற்றில்
மகிழ்வதும் தலைவருக்கு கேடாகும். .              பாமரன் பொருள்

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.    குறள் # 433
தினையளவே குற்றம் நேரினும் அதை பனையளவு பெரிதாகக்
கருதுவர் பழிபாவங்களுக்கு அஞ்சுபவர்            பாமரன் பொருள்

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை.   குறள் # 434.
குற்றம் வராமையை குறிக்கோளாகக் கொள்க, குற்றமே
அழிவைத் தரும் பகையாகும்.         பாமரன் பொருள்

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.    குறள் # 435
குற்றம் வரும் முன்பே வராமல் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை நெருப்புமுன் வைக்கப்படும் வைக்கோல் போல அழியும்.   . .         பாமரன் பொருள்

புதன், 16 அக்டோபர், 2013

பயப்படவேண்டியதற்கு பயப்படுவது அறிவாளிகள் செயல்.


பயப்படவேண்டியதற்கு பயப்படுவது அறிவாளிகள் செயல்.


பொருட்பால்
அரசியல்
அதிகாரம்; அறிவுடைமை
எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு.    குறள் # 426.
உலகம் எவ்வாறு நடந்துகொள்கிறதோ, உலகத்தோடு
அவ்வழியில் நடப்பதுதான் அறிவு,              பாமரன் பொருள்

அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதுஅறி கல்லா தவர்.      குறள் # 427.
அறிவுடையவர் நாளைவர இருப்பதை எண்ணி அறியவல்லவர், அறிவில்லாதவர்
அதனை அறிய இயலாதவர்.                     பாமரன் பொருள்

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.    குறள் # 428
பயப்படவேண்டியதற்கு பயப்படாதது அறியாமை. அஞ்சவேண்டியதற்கு
அஞ்சுவது அறிவாளிகள் செயல்,                  பாமரன் பொருள்

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்.    குறள் # 429.
பின்னர்வரப்போவதை அறிந்து காக்கும்அறிவுடையோர்க்கு இல்லை
அதிர்ச்சிதரும்படி வரும் துன்பம்.                 பாமரன் பொருள்

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.        குறள் # 430
அறிவுடையவர் எல்லாம் உடையவரே. அறிவில்லாதவர்
என்ன உடையவரானாலும் ஏதும் இல்லாதவரே.     பாமரன் பொருள்

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம்


திருக்குறள்  பொருட்பால்   அரசியல் 
அநிகாரம்;   அறிவுடைமை
குறள் 421 முதல் 425 வரை


அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்.    குறள் # 421
அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம் எதிர்ப்பவர்க்கும்
அழிக்க முடியாத உட்கோட்டை.   பாமரன் பொருள்.

.சென்ற இடத்தால் செலவிடாது தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.   குறள் # 422.
சென்ற இடத்தில் செல்லவிடாமல் தீமையை விலக்கி
நல்வழியில் செல்லவைப்பது அறிவு.     பாமரன் பொருள்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.   குறள் # 423.
எக்கருத்தை யார்யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின்
உண்மைத்தன்மையை காண்பது அறிவு.     பாமரன் பொருள்.

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு.   குறள் # 424.
பிறர்மனதில் பதியுமாறு எளிதாகக் கூறி தான்பிறர் பேச்சின்
நுட்பமான பொருளை காண்பது அறிவு.    பாமரன் பொருள்.

உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு.     குறள் # 425
உலகத்து உயர்ந்தோரை நட்பாக்கிக் கொள்வது அறிவுடைமை அதனால் மலர்வதும்

வாடுவதும் இல்லாதது அறிவு.      பாமரன் பொருள்.

வியாழன், 10 அக்டோபர், 2013

பார்ப்பதற்கு எளியராக கடுஞ்சொல் சொல்லாதவராக இருந்தால் மக்கள் போற்றுவர்

பொருட்பால் அரசியல்
 இறைமாட்சி
குறள் 386 முதல் 390 வரை 

காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்      குறள் # 386
பார்ப்பதற்கு எளியராக கடுஞ்சொல் சொல்லாதவராக இருந்தால்
மிகவும் போற்றுவர் மக்கள்             பாமரன் பொருள்

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொல்லால்
தான்கண் டனைத்துஇவ் உலகு,    குறள் # 387
இனியசொல்லுடன் கொடுத்துகாக்க வல்லவர்க்கு தன்சொல்லால்
எண்ணிய அனைத்தும் தரும் இவ்வுலகு        பாமரன் பொருள்

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறைஎன்று வைக்கப் படும்.    குறள் # 388
அறம், நீதி தவறாது மக்களைக் காக்கும் அரசை மக்கள்
தெய்வமாக மதித்து வணங்குவர்         பாமரன் பொருள்

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.     குறள் # 389
காதுபொறுக்கமுடியா சொற்களையும் பொறுக்கும் பண்புடைய அரசு
குடையின் கீழ் தங்கவிரும்புவர் உலகமக்கள்        பாமரன் பொருள்

கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க்கு ஒளி.    குறள் # 390
தரும்குணம் இரக்கம் நேர்மைதவறாமை மக்கள்நலன் காத்தல் நான்கும்
உடைய அரசே அரசுகளுக்கு முன்னோடி.        பாமரன் பொருள்

சனி, 5 அக்டோபர், 2013

அச்சமின்மை, ஈதல், அறிவுடைமை, ஊக்கமுடைமை நான்கும் தேவை ஆள்பவர்க்கு

பொருட்பால் அரசியல்
 இறைமாட்சி
குறள் 381 முதல் 385 வரை 


படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.     குறள் # 381
படை, மக்கள், செல்வம்,  நல்ஆலோசகர், நட்புநாடு, பாதுகாப்பு  ஆறும்
உடையவர் ஆட்சிசெய்பவர்களுள் சிறந்தவர்        பாமரன் பொருள்

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு     குறள் # 382
அச்சமின்மை, ஈதல், அறிவுடைமை, ஊக்கம்உடைமை எனும் நான்கும்
எப்போதும் நீங்காமை ஆள்பவர்க்கு இயல்பானபண்பு       பாமரன் பொருள்

தூங்காமை கல்வி துணிவுஉடமை இம்மூன்றும்
நீங்கா நிலன்ஆள் பவர்க்கு     குறள் # 383
காலந்தாழ்த்தாமை கல்விதுணிவுடைமை ஆகியமூன்றும்
நீங்கக்கூடாது ஆட்சி நடத்துபவர்க்கு.          பாமரன் பொருள்

அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு    குறள் # 384
அறநெறிதவறாது தீயவை விலக்கி வீரம்குறையாது
மானத்துடன் நடப்பதே நல்ல ஆட்சி.      பாமரன் பொருள்

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு   குறள் # 385
வரும்வழிஉண்டாக்குதல் சேர்த்தல் காத்தல் பாதுகாத்தவற்றை
பிரித்துவழங்கல் ஆகியவை செய்யவல்லதே அரசு.    பாமரன் பொருள்

வியாழன், 3 அக்டோபர், 2013

எவ்வளவு சிறிதாயினும் நல்லதைக் கேளுங்கள் நிறைந்த பெருமை தரும்
.பொருட்பால், அரசியல்
அதிகாரம் ; கேள்வி
குறள் 416 முதல் 420 வரை

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்    குறள் # 416.
எவ்வளவு சிறிதாயினும் நல்லதைக் கேளுங்கள் அந்த அளவேயானாலும்
நிறைந்த பெருமை தரும்.             பாமரன் பொருள்

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர்.   குறள் 417.
தவறாக உணர்ந்தாலும் அறிவற்றசொல் சொல்லமாட்டார் ஆராய்ந்தறிந்து
நிரம்பிய கேள்வியறிவு உடையவர்.        பாமரன் பொருள்

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.     குறள் # 418
ஓசையை காது கேட்டாலும் செவிட்டு தன்மையானதே கேள்வியறிவால்
துளைக்கப் படாத காது.                  பாமரன் பொருள்

நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது.     குறள் # 419.
நுண்ணிய கேள்விஅறிவு இல்லாதவர் பணிவான சொற்களைப்
பேசுபவராக ஆவது கடினம்.                    பாமரன் பொருள்

செவியின் சுவைஉணரா வாய்உணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.    குறள் # 420
கேட்கும் சுவை உணராது வாயின் சுவை மட்டும் உணரும் மக்கள்
இறந்தாலும் வாழ்ந்தாலும் என்ன பயன்.            பாமரன் பொருள்