வெள்ளி, 28 ஜூன், 2013

உதவுதற்குத் தயங்கார் கடமை அறிந்த அறிவாளிகள்.

அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: ஒப்புரவறிதல்.
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.          குறள் @ 211
கைம்மாறு வேண்டாதவை உதவிகள், உதவும் மழைக்கு
என்னசெய்து விடமுடியும் உலகத்தார்.    பாமரன் பொருள்


தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.         குறள் # 212
முயன்று சம்பாதித்த பொருளெல்லாம் தேவைப்படுவோருக்கு
உதவி செய்வதற்கே ஆகும்.           பாமரன் பொருள்

புத்தே ளுலக்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புறவின் நல்ல பிற.                  குறள் # 213.
தேவருலகத்திலும் இவ்வுலத்திலும் பெறுவது கடினம்
ஒப்புறவைப் போல மற்ற நல்லவை.    பாமரன் பொருள்.

ஒத்தது அறிவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.       குறள் # 214.
ஒப்புறவறிந்து பிறருக்கு உதவுபவர் உயிர்வாழ்பவர், மற்றவரோ
இறந்தவராக எண்ணப் படுவார்.   பாமரன் பொருள்

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.            குறள் # 215.
பயனுள்ள குளம் நீரால் நிறைந்தது போன்றது, உலகிற்குதவும்
பெரிய அறிவுடையவனின் செல்வம்.     பாமரன் பொருள்

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.        குறள் # 216
பயன்தரும் மரம் ஊரின்நடுவே பழுத்தாற் போன்றது, செல்வம்
மக்களால் விரும்பப் படுபவனிடம் சேர்ந்தால்.     பாமரன் பொருள்

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்    குறள் # 217.
எல்லா உறுப்புகளும் மருந்தாகும் மரம்போன்றது, செல்வம்
உதவிடும் பெரும்பண்பாளனிடம் சேர்ந்தால்.        பாமரன் பொருள்

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.           குறள் # 218
செல்வம்குறைந்த காலத்திலும் உதவுதற்குத் தயங்கார்
கடமை அறிந்த அறிவாளிகள்.     பாமரன் பொருள்

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.      குறள் # 219.
உதவும்நற்பண்பாளன் வறியவன் ஆவது செயத்தக்க உதவிகளை
செய்யாமல் வருந்துகிற தன்மையாகும்.      பாமரன் பொருள்

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.       குறள் # 220.
பிறருக்கு உதவுவதால் கேடுவரும் என்றால் அக்கேட்டை
தன்னை விற்றாவது வாங்கத்தக்கதே.     பாமரன் பொருள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.