சனி, 31 ஆகஸ்ட், 2013

ஆசை இல்லாதவருக்கு துன்பம் இல்லாது போகும்




குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: அவாவறுத்த



அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா     குறள் # 366.
ஆசைக்கு அஞ்சிவாழ்வது அறம். ஒருவனை
வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே               பாமரன் பொருள்

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றான் வரும்.   குறள் # 367
ஆசையினை மழுவதும் ஒழித்தால் கெடாமல் வாழ்வதற்குரிய செயல்
தான் விரும்பும் வழியில் உண்டாகும்.                பாமரன் பொருள்

அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.   குறள் # 368
ஆசை இல்லாதவருக்கு துன்பம் இல்லாது போகும் ஆசைஇருந்தால்
துன்பங்கள் மேலும் மேலும் வரும்.                     பாமரன் பொருள்

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்..        குறள் # 369
இன்பம் இடைவிடாமல் இவ்வுலகில் வரும் ஆசையென்னும்
துன்பங்களுள் பெருந்துன்பம் ஒழிந்தால்                     பாமரன் பொருள்

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்திலையே
பேரா இயற்கை தரும்.   குறள் # 370
நிறைவுபெறாத இயல்பிலான ஆசையை நீங்கினால் அந்தநிலையே
மாறா இயல்புடைய இன்பத்தைத் தரும்

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

விருப்பு, வெறுப்பு, அறியாமை இல்லாமல் வாழ்ந்தால் துன்பங்கள் நெருங்காது.

      அறத்துப்பால், குறள் இயல்:துறவறவியல் 
அதிகாரம்: மெய்யுணர்தல் 
குறள் எண்கள்: 356 - 360
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.                குறள் # 356
இங்குகற்று மெய்ப்பொருள் உணர்ந்தவர் மேற்கொள்வர்
மீண்டும் இங்கு பிறக்காமலிருக்கும் வழியை.       பாமரன் பொருள்

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.     குறள் # 357
ஒருவனது உள்ளம் உண்மைப்பொருளை (ஆராய்ந்து) உணர்ந்தால் நிச்சயமாக 
மறுபடியும் ஓர்பிறவி உண்டென எண்ணவேண்டாம்.  பாமரன் பொருள்
பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.       குறள் # 358
பிறவியெனும் அறியாமை விலக சிறந்தநிலைக்கு காரணமாம்
உண்மைப் பொருளைக்காண்பதே  அறிவுடைமை.    பாமரன் பொருள்

சார்புணர்ந்து சார்புகெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்    குறள் # 359
காரணமானதை உணர்ந்து அப்பற்றைவிலக்கி வாழ்ந்தால் ஒழுக்க உணர்வை அழித்து
பற்றமாட்டா பற்றவரும் துன்பங்கள்                   பாமரன் பொருள்

காமம் வெகுளி மயக்கம் இம்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.   குறள் # 360
விருப்பு வெறுப்பு அறியாமை எனும் இம்மூன்றின்

பெயரும் கெடும்படி நடந்தால் துன்பங்கள் வராது..        பாமரன் பொருள்

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

பொருளின் உண்மைத் தன்மையை உணர்வதே அறிவுடைமை.



குறள் பால்; அறத்துப்பால் குறள் இயல்; துறவறவியல்
அதிகாரம் – மெய்யுணர்தல்  
குறள் வரிசை: 351 முதல் 355 வரை

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணப் பிறப்பு     குறள் # 351
மெய்ப் பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருளென்று எண்ணும்
மயக்கத்தால் உண்டாகும் இழிவான பிறப்பு.   பாமரன் பொருள்.

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.  குறள் # 352  
அறியாமைஇருள் அகற்றி இன்பத்தைக் கொடுக்கும் மயக்கம்நீங்கி
குற்றமற்ற மெய்யுணர்வை உணர்ந்தவர்க்கு.     பாமரன் பொருள்

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.        குறள் # 353
சந்தேகத்திலிருந்து விடுபட்டு தெளிவுபெற்றவர்க்கு உலகத்தைவிட
வான்உலக்ம் அருகில் உளதாகும்.   பாமரன் பொருள்

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு,    குறள் # 354
ஐம்புலன்களின் உணர்வுகளை அடக்கியபோதும் பயனில்லை
உண்மையை உணரும் அறிவில்லாதவருக்கு.     பாமரன் பொருள்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.     குறள் # 355
எந்தப்பொருள் எத்தன்மையுடையாதாகத் தோன்றினாலும் அப்பொருளின்
உண்மைத் தன்மையை உணர்வதே அறிவுடைமை.   பாமரன் பொருள்  

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

பற்று விடாதவர்களுக்கு துன்பங்கள் பற்றிக்கொண்டு விடாது


குறள் பால்; அறத்துப் பால்   குறள் இயல்; துறவறவியல் 
அதிகாரம்; துறவு    
குறள் வரிசை;346 முதல் 350 வரை

யான்எனது என்னும் செருக்கு அறுப்பான்
வானோர்க்கு உயர்ந்த உலகம்  புகும்.  குறள் # 346
நான் எனது என்னும் கர்வத்தை மனதிலிருந்து போக்கியவன்
தேவர்களுக்கும் மேலான உயர்நிலை அடைவான்.     பாமரன் பொருள்


பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.  குறள் # 347
பற்றிக்கொண்டு விடாது துன்பங்கள், பற்றுக்களை
பற்றிக்கொண்டு பற்று விடாதவர்களுக்கு.     பாமரன் பொருள் 
(பற்றுக்களை பற்றிக்கொண்டு பற்று விடாதவர்களுக்கு துன்பங்கள் பற்றிக்கொண்டு விடாது)

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்        குறள் # 348
உயர்ந்த நிலையினர் ஆசைகளை முழுதும் துறந்தவர்கள். மயங்கி
அறியாமை வலையில் அகப்பட்டவர்கள் மற்றவர்கள்.  பாமரன் பொருள்
(ஆசைகளை முழுதும் துறந்தவர் உயர் நிலையினர், மற்றவரோ மயங்கி அறியாமை வலையில் விழுந்தவர்.)

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்     குறள் # 349
பற்றுக்களை விட்டபோதுதான் பிறவித்துன்பம் ஒழியும் இல்லையேல்
பிறப்பு இறப்பு மாறிமாறி வரும் நிலையின்மையே தொடரும். பாமரன் பொருள்

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு   குறள் # 360 
பற்றிக் கொள்ளவும் பற்றில்லாத கடவுளின் பற்றினை. அந்த பற்றை
பற்றுவதும் பற்று விடுவதற்கே.     பாமரன் பொருள்

புதன், 14 ஆகஸ்ட், 2013

பிறவித் துன்பம் போக்க முயல்பவருக்கு உடம்பே சுமையல்லவா

குறள் பால்; அறத்துப் பால்   குறள் இயல்; துறவறவியல் 
அதிகாரம்; துறவு    
குறள் வரிசை;341 முதல் 345 வரை

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.       குறள் # 341
எந்தப் பொருளிலிருந்து எந்தப் பொருளிலிருந்து பற்றுநீங்கியவன் துன்புறுவது அந்தந்த பொருளால் ஏற்படுவதில்லை.     பாமரன் பொருள்

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.    குறள் # 342.
இன்பங்கள் வேண்டின் பொருள்கள் உள்ள பொழுதே துறக்கவேண்டும் துறந்தபின்  இங்கு பெறக்கூடிய இன்பங்கள் பல       பாமரன் பொருள்

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் 
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.     குறள் # 343
ஐம்புலன்களை அடக்கவேண்டும் ஐம்புலன்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டிய பொருள்களையும் ஒரு சேர விடவேண்டும்.     பாமரன் பொருள்


இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.       குறள் # 344
இயல்பானதாகும் தவத்திற்கு பற்றுஇல்லாமை. பற்று உடையவராதல்
பற்றுக்களைப் பெருக்கி மயங்கச் செய்யும்      பாமரன் பொருள்
(தவத்திற்கு பற்றில்லாமை இயல்பானது பற்று உடையவராதல் பற்றுக்களைப் பெருக்கி மயங்கச் செய்யும்)

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுத்தல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.      குறள் # 345
மேலும் வேறுதொடர்பு எதற்காக? பிறவித் துன்பம் போக்க
முயல்பவருக்கு உடம்பே சுமையல்லவா.    பாமரன் பொருள்

சனி, 10 ஆகஸ்ட், 2013

வாழ்வின் நிலையற்ற தன்மையை உணராதவரே மிகப் பல எண்ணங்கள்.நினைப்பர்







குறள் பால்: அறத்துப்பால். 
குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: நிலையாமை.

குறள் எண்கள் 336 முதல் 340 வரை

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.     குறள் # 336
நேற்று உயிரோடு இருந்தவர் இன்று இல்லாது இறந்தார் எனும்
பெருமையை உடையது இவ்வுலகம்.     பாமரன் பொருள்

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.     குறள் # 337
ஒருவேளையும் வாழ்வின் நிலையற்ற தன்மையை உணராதவரே நினைப்பர்
ஒருகோடியல்ல மிகப் பல எண்ணங்கள்.      பாமரன் பொருள்

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.     குறள் # 338
முட்டைஓடு தனித்து கிடக்க குஞ்சு பறந்துபோனது போன்றதே
உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு.         பாமரன் பொருள்

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.           குறள் # 339

தூங்குவது போன்றது இறப்பு, தூங்கி
விழிப்பது போன்றது பிறப்பு.        பாமரன் பொருள்

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.      குறள் # 340
தங்கஒரு நிலையானவீடு அமையவில்லையோ, உடம்பிற்குள்
ஓர்மூலையில் தங்கியிருந்த உயிருக்கு.      பாமரன் பொருள்


வியாழன், 8 ஆகஸ்ட், 2013

நல்லறங்களை விரைந்து செய்ய வேண்டும்.









குறள் பால்: அறத்துப்பால். 
குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: நிலையாமை.
குறள் எண்கள் 331 முதல் 335 வரை

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.       குறள் # 331
நிலையில்லாதவற்றை நிலையானவை என்று உணர்கின்ற
அற்ப அறிவு இழிவானது.         பாமரன் பொருள்

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.      குறள் # 332
நாடகஅரங்கிற்கு மக்கள் கூடுவது போன்றதே பெருஞ்செல்வம் சேர்வது
அதுபோவதும் கூட்டம் கலைவது போன்றதே..      பாமரன் பொருள்

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.     குறள் # 333
நிலையில்லா இயல்பினது செல்வம் அத்தகுசெல்வம் கிடைத்தால்
நிலையான அறங்களைச் செய்க.        பாமரன் பொருள்

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.      குறள் # 334
நாள் என்பது ஒருகால அளவுபோல் காண்பித்தாலும்  உயிரை அறுக்கும்
வாள் அதுஎன உணர்ந்தவர்கள் அறிவர்.    பாமரன் பொருள்

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.    குறள் # 335
நாவைஅடக்கி விக்கல் (சாவு) வருவதற்குமுன் நல்லறங்களை
விரைந்து செய்ய வேண்டும்.        பாமரன் பொருள்