செவ்வாய், 2 செப்டம்பர், 2014

அரசுக்குப் புகழ்தருவது நேர்மையான ஆட்சியே


+பொருட்பால்   * அரசியல்   *   கொடுங்கோன்மை  *
குறள்  551 முதல் 560 வரை

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து     குறள்   #  551
கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும் அறவழிமீறி
மக்களுக்கு நல்லன அல்லாதவற்றைச் செய்யும் அரசு.   பாமரன் பொருள் 

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.          குறள்  # 552
ஆயுதம் ஏந்தியகள்வன் பொருளைக் கொடு என மிரட்டுவதுபோன்றது
ஆளுபவர் அதிகாரத்துடன் மிகஅதிக வரிகேட்பது.   பாமரன் பொருள் 

.நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.          குறள் # 553
ஒவ்வொரு நாளும் நன்மைதீமை ஆராய்ந்து ஆட்சிசெய்யா அரசு
ஒவ்வொரு நாளும் சீர்குலைந்து அழியும்.     பாமரன் பொருள் 

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு        குறள் # 554
பொருளையும் மக்களையும் சேர்த்து இழக்கும் நடுநிலை
ஆராயாமல் தவறாக ஆட்சி செய்யும் அரசு.   பாமரன் பொருள் 
  
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை   குறள்  # 555
துன்பப்பட்டு துன்பம்தாங்காது மக்கள் அழுத கண்ணீர்தான்
அரசின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.     பாமரன் பொருள் 

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி      குறள் # 556
அரசுக்குப் புகழ்தருவது நேர்மையான ஆட்சியே அதுஇல்லையெனில்
புகழ்நிலைக்காமல் சரிந்து போகும்.     பாமரன் பொருள் 

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு     குறள் # 557
மழைஇல்லாமை உலகுக்கு துன்பம் தருவதுபோல் அரசின்
அருள்இல்லாமை மக்களுக்குத் துயரம் தரும்.    பாமரன் பொருள் 

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.      குறள்  #558
வறுமையைவிட துன்பம்தருவது செல்வமுடைமை தவறாக ஆளும்
ஆட்சியின் கீழ் வாழ நேர்ந்தால்.     பாமரன் பொருள் 

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.      குறள் # 559 
ஆள்பவர் நேர்மைதவறி ஆட்சிசெய்தால் பருவமழை தவறி
மேகம் மழை பெய்யாது போகும்.     பாமரன் பொருள் 

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.       குறள் #560
பால்வளம் குறையும் அறவோர் அறநூல் மறப்பர்

ஆட்சியாளர் முறைப்படி காக்காவிட்டால்.    பாமரன் பொருள்