ஞாயிறு, 30 ஜூன், 2013

இல்லாதாருக்கு பொருளைக் கொடுப்பதே ஈகை


அறத்துப்பால், இல்லறவியல், அதிகாரம்: ஈகைகுறள் 221-225



வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.     குறள் # 221
இல்லாதாருக்கு பொருளைக் கொடுப்பதே ஈகை, மற்றவை
ஆதாயத்தை எதிர்பார்த்து தருவதாகும்.       பாமரன் பொருள்.

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.       குறள் # 222.
நல்வழிதான் என்றாலும் பெறுவது தீமையானதே, மேலுலகம்
கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது.    பாமரன் பொருள்

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.   குறள் # 223
இல்லையெனும் துன்பச் சொல் கூறாதிருப்பதும், கொடுப்பதும்
நற்குடும்பத்தில் பிறந்தவனிடமே உண்டு.     பாமரன் பொருள்.

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.   குறள் # 224.
இனிதில்லை இரக்கப் படுவது யாசிப்பவரின்
மலர்ந்தமுகம் காணும் வரை.       பாமரன் பொருள்.

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.       குறள் # 225.
தவவலிமை உடையவரின் வலிமையாம் பசிபொறுப்பது, அப்பசியை
போக்குபவரின் வலிமைக்கு குறைந்ததே.    பாமரன் பொருள்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.