வியாழன், 29 ஜனவரி, 2015

துன்பத்திற்கே துன்பம் தருவர், துன்பத்திற்கு வருந்தி கலங்காதவர்.


பொருட்பால்       அரசியல்     இடுக்கணழியாமை   குறள் 621 --630

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல்     குறள் # 621
துன்பம் வரும்போது மகிழ்க, துன்பத்தை வெல்ல வல்லது
அதனைப் போன்று வேறு ஒன்றும் இல்லை.     பாமரன் பொருள்


வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.    குறள் # 622
வெள்ளம் போல துன்பம் வந்தாலும் அறிவுடையவன்
உள்ளத்தினால் நினைத்த அளவில் அது அழியும். .     பாமரன் பொருள்

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.          குறள் # 623
துன்பத்திற்கே துன்பம் தருவர், துன்பத்திற்கு
மனம் தளர்ந்து வருந்தி கலங்காதவர். .     பாமரன் பொருள்

மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்ற
இடுக்கண் இடர்பாடு உடைத்து.   குறள் # 624
தடங்கலுள்ள பாதையில் வண்டியை இழுத்துச்செல்லும் எருது போன்றவன் அடையும்
துன்பம் துன்பப் படுவதாகும்        .     பாமரன் பொருள்

அடிக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும்       குறள் # 625
மென்மேலும் தொடர்ந்து துன்பம் வந்தாலும் மனந்தளராதவன் அடைந்த
துன்பம் துன்பப்பட்டுப் போகும்.       .     பாமரன் பொருள்

அற்றேம்என்று அல்லற் படுபவோ பெற்றேம்என்று
ஓம்புதல் தேற்றா தவர்            குறள் # 626
வருமையில் செல்வத்தை இழந்தோமே எனவருந்துவரோ! அது வந்த போது பெற்றோமே
என பற்றுடன் காத்திட நினையாதவர்.   .     பாமரன் பொருள்

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.    குறள் # 627
துன்பம் உடலுக்கு இயல்பானதே என்றுணர்ந்த பெரியோர் கலங்குவதை
ஒழுக்க நெறியாகக் கொள்ள மாட்டார்.     .     பாமரன் பொருள்

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.           குறள் # 628
இன்பத்தை விரும்பாதவனாய் துன்பம் இயற்கையானதே என்பவன்
மனந்தளர்ந்து துன்பப்படுவ தில்லை.   .     பாமரன் பொருள்

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.          குறள் # 629
இன்பம் வரும்போது அதனை விரும்பாதவன் துன்பம் வரும் நேரத்தில்
மனந்தளர்ந்து துன்பப்பட மாட்டான்.   .     பாமரன் பொருள்

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு.       குறள் # 630
துன்பத்தையே இன்பமாகக் கருதுபவன் என்றால் அவனுக்கு உண்டாகும்
பகைவரும் விரும்பும் சிறப்பு.     .     பாமரன் பொருள்

4 கருத்துகள்:

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

துன்பம் வரும்போது சிரிக்கோணும்.. ஹா..ஹா..ஹா.. அருமை. இதனை நானும் கடைப்பிடிக்கிறனான்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான அதிகாரம் ஐயா...

Unknown சொன்னது…

athira சொன்னது…""துன்பம் வரும்போது சிரிக்கோணும்.. ஹா..ஹா..ஹா.. அருமை. இதனை நானும் கடைப்பிடிக்கிறனான்.""

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

Unknown சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…
'' சிறப்பான அதிகாரம் ஐயா.''

தங்கள் வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.