ஞாயிறு, 29 மார்ச், 2015

துன்பம் ஏற்பட்டாலும் இழிவான செயல் செய்யமாட்டார் தெளிந்த அறிவுடையவர்


பொருட்பால்  
அமைச்சியல்  
வினைத்தூய்மை  

குறள் 651 முதல் 660 வரை


துணைநலம் ஆக்கம் தருஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்    குறள்  # 651
ஒருவருக்கு நல்லதுணை வலிமையைத் தரும் நற்செயல்
விரும்பிய எல்லாம் தரும்.       பாமரன் பொருள்

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.       குறள் # 652
என்றும் விட்டொழிக்க வேண்டும், புகழையும்
நன்மையையும் தராத செயல்களை.     பாமரன் பொருள்

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு பவர்.     குறள்  # 653
மேன்மையை அழிக்கும் செயலை விட வேண்டும் செயலில்
மென்மேலும் உயர முயல்பவர்         பாமரன் பொருள்


இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.        குறள் # 654

துன்பம் ஏற்பட்டாலும் இழிவான செயல் செய்யமாட்டார்
தெளிந்த அறிவினை உடையவர்.   பாமரன் பொருள்

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று      குறள்  # 655
பிறகு வருந்தும்படியான செயல்களைச் செய்யக்கூடாது அப்படிச்செய்தால்
அதுபோன்றவற்றைச் செய்யாமல் இருப்பது நல்லது. பாமரன் பொருள்


ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை     குறள் # 656
பெற்ற தாய் பசியால் வருந்துவதைக் காணநேர்ந்தாலும் செய்யாதீர்
சான்றோர் பழிக்கும் இழிசெயல்கள்.      பாமரன் பொருள்

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை     குறள் # 657
பழிஏற்று இழிதொழில் செய்து பெற்ற செல்வத்தைவிட சான்றோர்
வினைத்தூய்மையால் எய்தும் வறுமையே உயர்ந்தது.  பாமரன் பொருள்

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்      குறள் # 658
தகாதவை என ஒதுக்கப்பட்டவற்றை விலக்காமல் செய்தவர்க்கு அவை
முடிவடைந்தாலும் துன்பமே தரும்.      .    பாமரன் பொருள்

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.     குறள்  #  659
பிறர் வருந்தச்செய்து பெற்றபொருள் நாம் அழும்படி போகும், இழந்தாலும்
பிறகு பலன் தரும் நல்வழியில் வந்தவை.    பாமரன் பொருள்

சலத்தால் பொருள் செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று     குறள்   # 660
தீச்செயல்களால் பொருள் சேர்த்து அதைக் காக்க நினைப்பது பச்சைமண்

பானையில் நீர் ஊற்றி காப்பது போன்றது.       .    பாமரன் பொருள்

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை ஐயா...

Unknown சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…
அருமை ஐயா...
தங்கள் வருகைக்கும், ஊக்குவிப்புக்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.