வியாழன், 28 ஆகஸ்ட், 2014

வெற்றியைத் தருவது ஆயுதமல்ல நேர்மைதவறா ஆட்சியே


பொருட்பால்  - அரசியல் – செங்கோன்மை (குறள் 541 முதல் 550 வரை)

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.        குறள் 541
யாரிடமும் ஆராய்ந்து எப்பக்கமும் சாயாது நடுநிலையோடு
ஆராய்ந்து தண்டனை வழங்குவதே நீதிமுறை.        பாமரன் பொருள் 


வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.          குறள். 542
உயிர்கள் மழையைநம்பி வாழ்வதுபோல், அரசின்  நேர்மையான
ஆட்சியை நோக்கி வாழ்கின்றனர் மக்கள்    பாமரன் பொருள் 

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.           குறள் 543
அறவோர் போற்றும் நூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய்
இருப்பது ஆள்வோரின் நேர்மையான ஆட்சியே    பாமரன் பொருள் 

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.             குறள் 544 
மக்களை அரவணைத்து நேர்மையாய் ஆளும் அரசின்
கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.        பாமரன் பொருள் 

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு      குறள் 545
நீதிவழுவாது நேர்மையாய் ளும் ஆட்சியாளரின் நாட்டில்
பருவமழையும் குறையா விளைச்சலும் சேர்ந்தேஇருக்கும்.  பாமரன் பொருள்  

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.        குறள்  546
வேலல்ல வெற்றியைத் தருவது, ஆள்பவரின் நேர்மையான 
ஆட்சியே அதுவும் தவறாதுஇருக்குமெனில்         பாமரன் பொருள் 

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை     
முறைகாக்கும் முட்டாச் செயின்.     குறள்  547
ஆட்சியாளர் காப்பாற்றுவர் உலகையெல்லாம் ஆள்பவரை
அந்தஆட்சியே காக்கும் நேர்மையாய் ஆட்சிசெய்தால்     பாமரன் பொருள்  .

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.        குறள் 548
எளியதோற்றமுடையவனாய் ஆராய்ந்து நீதிவழங்காத ஆட்சியாளர்
தாழ்ந்த நிலையிலிருந்து தானே கெட்டழிவர்       பாமரன் பொருள் 

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.        குறள் 549
மக்களை யாரும் துன்புறுத்தாது காத்து குற்றம் செய்பவரை தண்டித்தல்
பழியல்ல ஆள்பவரின் கடமை.       பாமரன் பொருள் 

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.      குறள்  550
 கொடியவர்களை மரணதண்டனை கொடுத்து அரசு ஒடுக்குதல் உழவன்
களையை நீக்கி பயிரைக் காப்பது போன்றது.   பாமரன் பொருள் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.