புதன், 29 ஏப்ரல், 2015

சொல்வது எல்லோருக்கும் சுலபம்

பொருட்பால்  அமைச்சியல்     வினைத்திட்பம்    
குறள் எண் 661 முதல் 670

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற           குறள் 661
செயலில் உறுதி என்பது ஒருவரின் மனஉறுதியே
மற்றவை எல்லாம் வேறு.            பாமரன் பொருள்.

ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறுஎன்பர் ஆய்ந்தவர் கோள்.      குறள் 662
இடையூறை நீக்குதல் அதுவந்தால் மனம் தளராமை இவ்விரண்டும்
வழிஎன்பது ஆராய்தறிந்தவரின் கொள்கை.       பாமரன் பொருள்.

கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமம் தரும்.               குறள் 663
செயல்முடிவில் தெரியும்படி செய்யும்தகுதியே ஆளுமை இடையில் தெரிந்தால்
நீங்காத துன்பத்தைத் தரும்.            பாமரன் பொருள்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.           குறள் 664
சொல்லுவது எல்லோருக்கும் எளிது, கடினம்
சொல்லிய படி அதைச் செய்தல்.         பாமரன் பொருள்.


வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறுஎய்தி உள்ளப் படும்        குறள் 665
செயல்திறனால் பெருமைபெற்றவரின் செயல்உறுதி ஆட்சியாளரையும்
கவர்ந்து மதித்துப் போற்றப் படும்.        பாமரன் பொருள்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.     குறள் 666
நினைத்ததை நினைத்தபடி அடைவார்கள் எண்ணியவர்
செயல்உறுதி உள்ளவராக இருந்தால்.    பாமரன் பொருள்.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.    குறள் 667
ஒருவரது உருவத்தைப் பார்த்து இகழக்கூடாது பெருந்தேருக்கு முக்கிய
அச்சாணி போன்றவர்கள் உள்ளனர்.          பாமரன் பொருள்.

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல்.         குறள் 668
மனந்தளராமல் துணிந்து ஏற்ற செயலை சோர்வுஇல்லாது
காலந்தாழ்த்தாது செய்ய வேண்டும்.      பாமரன் பொருள்.

துன்பம் உறவரினும் செய்க துணிவுஆற்றி
இன்பம் பயக்கும் வினை.     குறள் 669
துன்பம் அதிகமாக வந்தாலும் துணிவோடு விடாது செய்ய வேண்டும்
முடிவில் இன்பம் தரும் செயலை.        பாமரன் பொருள்.

எனைத்திட்பம் எய்திய கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.    குறள் 670
எந்த உறுதி உடையவராக இருந்தாலும் தொழிலில் உறுதி
இல்லாதவரை உலகம் மதிக்காது.       பாமரன் பொருள்.

3 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நன்றி நண்பரே

Unknown சொன்னது…

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…
நன்றி நண்பரே

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

Unknown சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…
..//அருமை ஐயா...//

தங்கள் வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.